பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கருப்பண்ண சுவாமி கோயில் தேர் திருவிழா

பெரம்பலூர், ஜூன் 2: பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் கருப்பண்ணர் சுவாமிக்கு திருத்தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கடந்த மாதம் 28ம்தேதி வரதராஜ பெருமாள் கோயிலில் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 29ம்தேதி மாரியம்மன் குடி அழைத்தல், பொங்கல் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 30ம் தேதி மாரியம்மனுக்கு அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடங்களையும் அக்கினி சட்டியையும் கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.

31ம் தேதி கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு பூஜை, வாண வேடிக்கையுடன் அலங்கார ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (1ம் தேதி) காலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வைக்கப்பட்டது. கோவிலின் அருகில் இருந்து புறப்பட்ட திருத்தேரோட்டத்தில் அன்னமங்கலம் கிராம முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் மட்டுமன்றி, விசுவக்குடி, அரசலூர், ஈச்சங்காடு கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பி டித்து இழுத்துச் சென்றனர். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. அன்னமங்கலம் கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் இணைந்து தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று(2ம் தேதி) மஞ்சள் நீர் தெளித்தலுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: