நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.5.5 லட்சம் கொள்ளை பெண் காவலரின் கணவர் உள்பட 4 பேர் கைது

நெல்லை, மே 28: சேர்ந்தமரம் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.5.5 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் காவலரின் கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கோபிராஜ் (29), தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த 17ம் தேதி சுரண்டையில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள நிறுவனத்துக்கு பைக்கில் சென்றுள்ளார்.

கே.வி.ஆலங்குளம் காட்டு பகுதியில் செல்லும்போது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கோபிராஜை பைக்குடன் சாலையோர பள்ளத்தில் தள்ளி விட்டது. பின்னர் அவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து கோபிராஜ், சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். பயிற்சி ஏஎஸ்பி  கிரிஷ் யாதவ் தலைமையில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, எஸ்ஐக்கள் வேல்பாண்டி, குற்றப்பிரிவு குட்டி ராஜா, ஏட்டு குருநாதகுரு, குற்றப்பிரிவு முதல் நிலை காவலர்கள் விஜயபாண்டியன், சிவராமகிருஷ்ணன், மதியழகன், மாரிமுத்து, சைபர் கிரைம் காவலர்கள் மனோஜ், ஜேசு மரியஅந்தோணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குருவிகுளம் செக்கடி வடக்கு தெருவை சேர்ந்த, பெண் காவலரின் கணவரான மாரியப்பன் (29), செந்தட்டி வேலுச்சாமி மகன் முத்துக்குமார் என்ற செயின் குமார்(32), தளவாய்புரம் பால்பண்ணை தெருவை சேர்ந்த திருமலைக்குமார் (எ) மின்னல் குமார்(27), ஆட்கொண்டார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த கோபால் மகன் அய்யனார் (26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோபிராஜை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.5.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நால்வர் மீதும் சேர்ந்தமரம், சங்கரன்கோவில் காவல் நிலையங்களில் ஆள்கடத்தல், வழிப்பறி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ், புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: