உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில், வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இதில், 200 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி நடக்க உள்ள இடத்தில் தினமும் பல்வேறு துறை அதிகாரிகள் வந்து ஆய்வுக் கூட்டம், ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், குடிநீர் வசதி, கழிப்பறை, மின்சாரம், தெரு மின் விளக்கு பழுது பார்ப்பு பணிகள், மாமல்லபுரத்தை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பது குறித்து கூறினார்.

தொடர்ந்து, தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருபவர்கள், புராதன சின்னங்களை கண்டு களிப்பார்கள். அவர்களை கவரும் விதமாக அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அறிவுறுத்தினார். அவருடன் கலெக்டர் ராகுல்நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி திமுக கவுன்சிலர் மோகன்குமார், ஒன்றிய கவுன்சிலர் எஸ்வந்த் ராவ் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: