நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை

சேலம், மே 27: சேலம் நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கலா(55). நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், அங்குள்ள டவுன் பிளான் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அங்கு 3 பேர் டூவீலரில் நின்று கொண்டிருந்தனர். திடீரென அதில் ஒருவன், கலா அணிந்திருந்த 4.5 பவுன் தங்க தாலியை பறித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தாலியை இறுகப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அவர் ஜாக்கெட்டுடன் தாலியை ஊக்கால் மாட்டி வைத்திருந்தார். தாலியை ஒரு கையாலும், இன்னொரு கையால் நகை பறித்த நபரையும் பிடித்துக்கொண்டு அலறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கலாவின் கழுத்தை நெரித்தார். சத்தம் கேட்டு, அருகாமை வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அதற்குள் பாதி நகையை பறித்துகொண்டு, கலாவை கீழே தள்ளி விட்டு,  தயாராக இருந்த டூவீலரில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த சூரமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் நகை பறிப்பு நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: