தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை உயர்த்திய பிரதமர் மோடியை நன்றியுடன் வரவேற்போம் கல்வியாளர் குணசேகர் அறிக்கை

நெல்லை, மே 27: பிரதமர் நரேந்திர மோடியை  தேவேந்திரகுல வேளாளர்கள் என்றென்றும் நன்றி உணர்வுடன் வரவேற்போம் என கல்வியாளரான முனைவர் குணசேகர் அரியமுத்து தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று சென்னை வந்த பிரதமருக்கு பல்லவன்  இல்லம் முன்பாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேவேந்திரர்கள்  ஒருங்கிணைந்து நின்று மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தொன்மைமிக்க ஆலயங்களில் பல நூறு ஆண்டுகளாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் முதல் மரியாதை பெற்று வருகிறது. ஆனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பண்பாடுமிக்க வரலாற்று சிறப்புடைய பெயர்களில் அழைக்காமல் பல்வேறு பெயர்களில் அழைத்து வந்தனர். இந்நிலையில் அறச்சமூகமான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பண்பாடுகள், வரலாறுகள் அனைத்தையும் தெளிவாக அறிந்து கொண்டு முதன் முதலில் பிரதமர் நரேந்திரமோடி, பொதுவெளியில் பல நிகழ்வுகளில் தேவேந்திர குல வேளாளர் என்று‌ அழைத்து கவுரவம் தந்தார்.

  2015ம் ஆண்டு பிரதமர் மோடியை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 101 பிரதிநிதிகள் டெல்லி சென்று சந்தித்தபோது அவர் ‘‘நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரன்’’ என்று கூறி அவர்களுக்கு விருந்து அளித்து அனுப்பிவைத்தார். மேலும் பாஜ கூட்ட மேடையில் ‘தேவேந்திரரும் நரேந்திரரும் இணைந்தால், ஒன்றும் ஒன்றும் இரண்டு அல்ல; தேவேந்திரரும், நரேந்திரரும் இணைந்தால் பதினொன்று எனப் பெருமையாகக் கூறினார். கடந்த 2021ம் ஆண்டு பிப். 14ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய மோடி ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க சமூகம். பசுவை தெய்வமாக வணங்கும் பண்பாட்டுச் சமுகம். முதன்முதலில் குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்கியவர்கள் குடும்பர்கள் என்கிற உண்மையை அறிந்து கொண்டு தேவேந்திரர்கள் கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்’ என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய அரசின்‌ அரசு ஆவணங்களில் 1951ம் ஆண்டு வரை இருந்த, நாங்கள் இழந்த தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை மீண்டும் எங்களுக்கு அரசாணையாக வழங்கினார். தமிழகத்தின் 400க்கும் மேற்பட்ட ஆலயங்களில் பல்வேறு வழிபாட்டு உரிமை முறைகளை பெற்று வருவதை நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்புகளில் பதிவேற்றம் செய்தார். ‘தேவேந்திரர்கள் தொட்டால்தான் தேரோடும்; தேவேந்திரர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் மரபுவழியில் வந்தவர்கள்’’ என்ற உயர்ந்த வரலாற்றையும் நாடாளுமன்ற அவைக்குறிப்புகளில் பதிவு செய்தார்.

இதுவரை எந்த ஒரு பிரதமரோ, எந்த ஒரு முதல்வரோ எங்கள் சமூகத்திற்கு செய்யாத வகையில் மிகப்பெரிய அளவில் எங்கள் சமூகத்தை பொதுவெளியில் கௌரவப்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் அரசாணை மூலமாக அடையாளப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்புகளில் வரலாறுகளை பதிவு செய்ததன் மூலமாக தமிழகத்தின் மூத்த குடிமக்கள் என்கிற தொன்மையான வரலாற்றையும் பதிவு செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகம் என்றென்றும் நன்றி உடைய சமூகமாக இருக்கும். எனவே, எத்தனை முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் அவர்களை நன்றி உணர்வுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் வரவேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு சென்னை பல்லவன் இல்லம் முன்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில தலைவருமான சோழவந்தான் மாணிக்கம் தலைமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேவேந்திரர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இதற்காக அரும்பாடுபட்ட சோழவந்தான் மாணிக்கம் மற்றும் சென்னை மாநகர மற்றும் புறநகர தேவேந்திர குல வேளாளர் சமூக சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அரியமுத்து குணசேகர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: