பெரம்பலூரில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்ட முகாம்

பெரம்பலூர், மே 26: பெரம்பலூரில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்ட முகாமை கலெக்டர்  வெங்கடபிரியா துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பிறப்பு முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் காலம் மார்ச் 21 முதல் 27ம் தேதி வரை நடத்தப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 39,992 குழந்தைகள் கலந்துகொண்டனர். இவர்களில் 11,669 கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 110 விதியின் கீழ் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டததின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பிறப்பு முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு டிஎன்ஐசிடி எஸ் என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ தலையீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமை தமிழக முதல்வர் கடந்த 21ம்தேதி நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தினை கலெ க்டர் வெங்கடபிரியா பெரம்பலூர் வட்டாரம் நூலகத் தெரு குழந்தைகள் மையத்தில் துவக்கி வைத்தார். இம்முகாமானது அனைத்து வட்டாரங்களிலும் 21 நாட்களில் 168 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் 25 குழந்தைகள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சூர்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: