செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

 

 

பாடாலூர், ஜூன் 3: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குபேர ஹோம சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு, கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் குபேர ஹோமமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம் appeared first on Dinakaran.

Related Stories: