சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோரா சுற்றுலாத்தலத்தில் மேம்பாட்டு பணிகள்

பேராவூரணி, மே 20: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோரா சுற்றுலாத் தலத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் ஆய்வு செய்தார். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் 2ம் சரபோஜி கடற்கரை பகுதியான மனோராவில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினார். அறுகோண வடிவில், எட்டு மாடியுடன், 23 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் மனோரா என அழைக்கப்படுகிறது. மனோராவை காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே, மனோராவில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் கட்டுவது, படகுச் சவாரி வசதி என புதிய கட்டமைப்பை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ அசோக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் சவாரிக்கென படகுக்குழாம் ரூ.45 லட்சம், பயணிகள் ஓய்வு விடுதிக்கு ரூ.30 லட்சம், பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.35 லட்சம் என, மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து தற்போது, மனோராவில் நடைபெற்று வரும் பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், திமுக தலைமை கழக பேச்சாளர் அப்துல்மஜீது, ஒன்றிய பொறியாளர் அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: