தமிழக அரசு ஏற்றுகின்ற தீர்மானத்தை ஆளுநர் பரிந்துரைக்க அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது

பாபநாசம், மே 20: தமிழக அரசு ஏற்றுகின்ற தீர்மானத்தை ஆளுநர் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழக அரசு இயற்றும் சட்டங்களை ஆளுநர் பரிந்துரை செய்ப வேண்டிய அவசியமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் முதல்வர் ஆற்றியுள்ள பல்வேறு திட்டங்களால் இன்று இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாபநாசம் பகுதியில் வெண்ணாறு பாசன வடிநிலம் பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பாபநாசம் கோவிந்தகுடி கிராமம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.9 கோடி செலவில் படுக்கை அணை மற்றும் பாபநாசம் கோட்டம் வெட்டாற்றில் 8 கோடி மதிப்பில் படுக்கை அணையும், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் பாபநாசம் தேவராயன் பேட்டை, கோவிலூர், சூரியக்கோட்டை, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், காவலூர், வடக்குமாங்குடி, ஒன்பது வேலி ஆகிய பகுதியிலுள்ள கோயில்களை திருப்பணி பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் சுவாமி கோயில் உள்ள இடத்தில் ரூ.1.25 கோடியில் திருமண மண்டபம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். திருபுவனம் பட்டு சேலைகள் விற்பனையை ஊக்குவிக்க பிரத்யோக கைத்தறி இணை அங்காடி 3.5 கோடி மதிப்பில் நிறுவப்படும் என தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 31 கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இந்த தொகுதியில் ஒரு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இது போல எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, ஓராண்டில் இவ்வளவு சாதனைகளை செய்த ஒப்பற்ற முதல்வர் இந்திய வரலாற்றிலேயே இவரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்பது தான் உண்மை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் மதுரை சுந்தர் ராஜன், எம்எல்ஏ அன்பழகன், மாநகர துணை மேயர் தமிழழகன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Related Stories: