நந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை முகாம் நடந்தது. இதில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை முகாம் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்திமலர் கலந்து கொண்டு தீ தடுப்பு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜாஸ்பின் தலைமையில், மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், திடீரென வீட்டுக்குள் காஸ் சிலிண்டர் மற்றும் ஆயில் கசிவு ஏற்பட்டால் தீயை எப்படி அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் மூலம் ஒத்திகை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மருத்துவ குழுவினருடன் இணைந்து விழிப்புணர்வு கோலப்போட்டி, விளம்பர பலகை மற்றும் ஒரு வரி கருத்து போட்டிகள் நடந்தன. இதில், மறைமலைநகர் தீயணைப்பு துறை ஆய்வாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: