ஊட்டியில் கொட்டி தீர்க்கும் மழையால் மலர் கண்காட்சி நடப்பதில் சிக்கல்

ஊட்டி, மே 18:  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். சில சமயங்களில் டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும். இச்சமயங்ளில் பொதுமக்கள் சூரியனை பார்ப்பதே அரிது. டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை வெயில் அடித்தாலும், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மே மாதங்களில் மழை கொட்ட துவங்கி உள்ளது. கடந்த 15 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

நாளை மறுநாள் (20ம் தேதி) மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது. நாள் தோறும் இரவு நேரங்களில் மழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள டேலியா மலர்கள் அழுக துவங்கியுள்ளன. அதேபோல், மேரிகோல்டு மலர்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், மலர் கண்காட்சிக்கான அலங்கார பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி, புல் மைதானங்கள் சேறும் சதியுமாறி மாறிவிடும். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முழுமையாக மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்படும்.  மலர் கண்காட்சியின் போது மழை பெய்தால், சுற்றுலா பயணிகள் பாதிப்பது மட்டுமின்றி, உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையால் மலர் கண்காட்சி அலங்காரங்கள் பாதிக்குமோ என்ற அச்சத்தில் தோட்டக்கலைத்துறையினர் உள்ளனர்.

Related Stories: