ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே தார் சாலை அமைக்காததை கண்டித்து மறியல்

ஈரோடு, மே 18: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே திட்டப்பணி நிறைவடைந்தும், தார் சாலை அமைக்காததை கண்டித்து வணிகர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் எதிரே ஈ.வி.கே.சம்பத் சாலை, மூலப்பட்டறை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையின் இருபுறமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. மாநகராட்சி திட்டப்பணிகளுக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன் இங்கு சாலைகள் தோண்டப்பட்டது. பின்னர், திட்டப்பணிகள் முடிந்து 3 மாதம் கடந்தது. சில வாரங்களுக்கு முன் சாலையை மட்டம் செய்ய ஜல்லி கற்கள் (மெட்டல் லேயர்) மட்டும் போட்டு சென்றனர். ஆனால், சாலையை போடவில்லை.

இதனால், அப்பகுதி வழியாக பஸ்கள், கனரக, இலகு ரக வாகனங்கள் செல்லும் போது புழுதி படலமாக மாறியதால், அங்குள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், ஈவிகே சம்பத் சாலையை சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் எதிரே சத்தி சாலை முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, ஜெயமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து, மக்களிடம் பேசினர். அப்போது, இந்த சாலையில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடந்து வருவதால், அதனை விரைந்து முடித்து, அடுத்த 10 நாட்களுக்குள் தார் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Related Stories: