கற்சிலைகள் திருடிய திருநங்கை கைது: கூட்டாளிக்கு வலை.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தேவனேரியை சேர்ந்தவர் ருக்மாங்கதன். இசிஆர் சாலையில், தனது வீட்டை ஒட்டி, சிற்பக் கலைக்கூடம் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், ருக்மாங்கதன் வீட்டின் அருகே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர், வெளியே வந்தபோது, சிற்பக் கலை கூடத்தில் இருந்து பெண் உள்பட 2 பேர் பைக்கில் சிலைகளை, திருடி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், அவர்கள் பைக் மற்றும் சிலைகளை போட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். உடனே போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பெண்ணை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பிவிட்டார்.

அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருநங்கை சந்திரலேகா (21), இவரது நண்பர் புகழ் என்பவருடன் சேர்ந்து சிலைகளை திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 அடி அம்மன் சிலை, 1 அடி மதுரை வீரன் சிலை, 1 அடி யோக அயஹ்ரீவர் சிலை, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், திருநங்கை சந்திரலேகாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய அவரது கூட்டாளி புகழை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: