விருத்தாசலம் பெரியார் நகர் நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்

விருத்தாசலம், மே 12:   தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடலூர்- விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதில் விருத்தாசலம் நகர பகுதியில் 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 12 கோடி மதிப்பில் நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகரில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இரு பக்கங்களிலும் சிமெண்ட் டைல்ஸ் பதித்து நடைபாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இப்பணிகளில் சில கடைகளின் முன்புறம் உள்ள பகுதிகளை அகற்றி பணிகள் செய்து வரும் நிலையில், சில கடைகளின் முன் புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பாரபட்சத்துடன் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஒரே அளவை பின்பற்றாமல் சில கடைகளுக்கு வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே தற்போது நான்கு வழி சாலையாக மாறும் இந்த சாலையில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க இந்த நடை பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நேர்மையாகவும், முறையாகவும் பணிகளை மேற்கொள்ளாமல் பணி செய்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: