கலெக்டர் பெருமிதம் கோடை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம்

தஞ்சாவூர், மே 11: கோடை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டது. தரமான விதைகளின் குணாதிசயங்களான நல்ல முளைப்பத்திறன், கலப்பு இல்லாமை, தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்கம் இல்லாத விதைகளாக தேர்ந்தெடுத்து விதைத்தல் அவசியமாகும். தரமான அதிக முளைப்புத் திறனுடைய விதைகளை விதைப் பரிசோதனை செய்து விதைப்பு மேற்கொண்டால் வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கையை பராமரித்து உயர் விளைச்சலைப் பெறலாம். நடப்பாண்டில் கோடை நெல் சாகுபடிக்கு உகந்த நெல் ரகங்களான ஏடிடி-37, ஏடிடி-38 கோ-51, ஏஎஸ்டி-16, ஏடிடி-43 மற்றும் ஏடிடி(ஆர்) 45 ஆகிய ரகங்களில் தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும். நெற்பயிருக்கு குறைந்த பட்சம் 80 சதவீத முளைப்புத்திறன் இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகபட்சமாக 13 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதை ரகங்களில் 100 கிராம் என்ற அளவில் மாதிரிகள் எடுத்து விதை மாதிரிகளுடன் தங்கள் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80ஐ தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்திலும், திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திலும் மற்றும் நாகை வெளிப்பாளைத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திலும் செலுத்தி விதைகளின் தரத்தினை பகுப்பாய்வு மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதனால் விதைக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம் என தஞ்சாவூர் விதைப்பரிசோதனை அலுவலர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: