செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் மேற்கூரை பறந்தது: நெல் மூட்டைகள் சேதம்; விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: திருவடிசூலம் நெல் கொள்முதல் நிலையத்தில், திடீர் மழையால் நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து நாசமாயின. இதனால் விவசாயிகள், வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பலத்த சூறை காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நாராயணமூர்த்தி என்பவரது தோட்டத்தில், கனமழையால் 50க்கும் மேற்பட்ட மாமரங்கள் முறிந்து விழுந்தன. தற்போது மாம்பழங்கள் காய்க்க துவங்கி உள்ள நிலையில், மாங்காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து கொட்டி விட்டன. இதனால் சுமார் ரூ.4 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் கூறினார். இதற்கு, தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திருவடிசூலத்தில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது.

தனியார் வியாபாரிகளை விட, அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லுக்கு கூடுதல் தொகை கிடைப்பதால், விவசாயிகள் இங்கு நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து, டோக்கன் பெற்று, பின்னர் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனர். இதனால் தாங்கள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையம் அருகே திறந்த வெளியில் பாதுகாப்பின்றி மூட்டைகளாக அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அசானி புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நெல், கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிவிட்டன. இதையொட்டி, விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி, முறைகேடு இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் நாசமான நெல்லுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

முறிந்து விழுந்த மரங்கள்: செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் செங்கல்பட்டு, வல்லம், மேலமையூர் உள்பட பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புலிப்பாக்கம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயிலில் வந்த பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தை அகற்றிய பிறகு ரயில் சேவை துவங்கியது.

செங்கல்பட்டு ரயில் நிலைய மேற்கூரைகள் சூறைகாற்றில் தூக்கி வீசப்பட்டன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம், செய்யூர், தாம்பரம், மறைமலைநகர் உள்பட பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சார வயர்களில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் குடிசைகள் சேதமடைந்தன. செங்கல்பட்டு அடுத்த உதயம்பாக்கத்தில் பனை மரம் விழுந்ததில், பசுமாடு பரிதாபமாக இறந்தது.

செய்யூர், கேளம்பாக்கம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளத்தில் கொட்டி வைத்த உப்பு மழைநீரில் கலந்து ஓடியது. மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. திம்மாவரம், பாலூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைமரம், வெண்டை, கத்தரி, மிளகாய் செடிகள் மழையால் சேதமாயின்.

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. இதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையொட்டி, அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உருவானது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் பகுதியில் திடீர் மழை பெய்து மக்களை குளிர செய்தது. இதனால் சாலையில் பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. பின்னர், மீண்டும் வெயில் எரிக்க தொடங்கியது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே, சாரல் மழை பெய்து வந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ததால், காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம், செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், பொன்னேரிகரை, வெள்ளைகேட், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நிலத்தடிநீர் ஆதாரம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெயிலில் தற்போது மழை பெய்ததால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவியது இதனால் மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

Related Stories: