33 ஆண்டுகளுக்கு பிறகு திருவாசி சிவாலயத்தில் புதியதேர் வெள்ளோட்டம் பக்தர்கள் உற்சாகத்துடன் இழுத்தனர்

முசிறி, ஏப்.26: திருவாசி சிவாலயத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் பிரசித்திபெற்ற  பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலின் தேர் பழுதடைந்தது. இதனால் கடந்த 33 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தேர் கட்டுமான பணி தொடங்கி முடிவடைந்தது. இதையொட்டி திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதியுடன் தீபாராதனை யாத்ர தானமுடன் உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நூதன ரதத்தில் கடம் வைத்து (வெள்ளோட்டம்) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: