புதுவையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஏப். 25: புதுச்சேரி மாநிலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 31ம் தேதி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறியது. தினமும் பூஜ்ஜிய தொற்று பதிவாகி வந்த நிலையில் காரைக்காலில் கடந்த 14ம் தேதி 2 பேரும், 15ம் தேதி ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் குணமடைந்ததையடுத்து, 22ம் தேதி முதல் மீண்டும் புதுவை தொற்று இல்லாத மாநிலமானது. இந்நிலையில் நேற்று நடந்த கொரோனா பரிசோதனையில் புதுச்சேரியில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் நேற்று 318 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு 3 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் தொற்றில்லாத பகுதியாக உள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,62,850 பேருக்கும், 2வது டோஸ் 6,93,325 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 18,991 பேருக்கும் என மொத்தம் 16,75,166 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: