ரூ.1.41 கோடி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

ஊட்டி, ஏப்.22: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கடநாடு, எப்பநாடு, ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடநாடு பகுதியிலுள்ள சொக்கனள்ளி கிராமத்தில், பழங்குடியினர்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ், தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 20 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதே ஊராட்சியில், அவ்வீடுகளுக்கு ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆணைக்கட்டி கிராமத்தில் பழங்குடியினர்களுக்கான பசுமை வீடுகள் ரூ.3 லட்சம் வீதம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் தேவைக்கேற்ப நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜதா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நந்தகுமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனகுமார மங்களம், ஸ்ரீதரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: