பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

ஈரோடு,ஏப்.22: ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனரால் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கடந்த 19ம் தேதி பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவிலான போட்டிக்கு தமிழாசிரியர் ரஞ்சிதம், முத்துகருப்பையா, கலைக்கோவன் ஆகியோரும், கல்லூரி அளவிலான போட்டிக்கு உதவி பேராசிரியர்கள் கண்ணன், குருமூர்த்தி, தினேஷ்வரன் ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர்.போட்டிகளை விசுவநாதன் ஒருங்கிணைத்தார்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 25 பள்ளிகள் பங்கேற்றன. இதில், கருங்கல்பாளையம் நகரவை மகளிர் பள்ளி மாணவி பிரீத்தி சுகந்திராவுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு பள்ளி மாணவி அவிஷ்னாவுக்கு 2வது பரிசாக ரூ. 3,000, ஈரோடு கலைமகள் கல்விநிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகாவுக்கு 3ம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.

சிறப்பு பரிசாக, வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சுதர்சன், வலையப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கெளசிகா ஆகியோர் தலா ரூ. 2,000 பரிசு பெற்றனர். கல்லூரி அளவிலான போட்டியில், 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், சித்தோடு ஸ்ரீவாசவி கல்லுாரி மாணவர் வாஞ்சிநாதன் முதல் பரிசாக ரூ. 5,000, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி மாணவி கலைவாணி 2வது பரிசாக, ரூ.3,000, ஈரோடு சி.என்.கல்லூரி மாணவி கெளரிமனோகரி 3ம் பரிசாக ரூ. 2,000 பெற்றனர்.

Related Stories: