4 மண்டல குழு தலைவர் தேர்தலில் திமுக வெற்றி நிலைக்குழுத்தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது வேலூர் மாநகராட்சியில்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலக்குழு தலைவர்களாக திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து, நிலைக்குழுத்தலைவர் பதவிக்கு தேர்தல் இன்று நடக்கிறது. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. ஒரு மண்டலத்திற்கு 15 வார்டுகள் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் 1வது மண்டல குழு தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த புஷ்பலதா வன்னியராஜா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

2வது மண்டல குழு தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த நரேந்திரனும், ஆர்.பி.ஏழுமலையும், 3வது மண்டல குழு தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த யூசுப்கான், அதிமுகவை சேர்ந்த எழிலரசன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இதில் ஆர்.பி.ஏழுமலையின் வேட்பு மனுவில் பிழை இருந்ததால் அவரது மனு தள்ளுபடி ெசய்யப்பட்டதாக கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார். இதனால் நரேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஆர்.பி.ஏழுமலை மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் சிறிது நேரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

3வது மண்டல குழு தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த யூசுப்கான் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எழிலரசன் 4 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 4வது மண்டல குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ெவங்கடேசன் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமார் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மண்டல குழு தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். இதையடுத்து, மாநகராட்சியில் உள்ள கணக்கு, பொது சுகாதாரம், கல்வி, வரி விதிப்பு மற்றும் நிதி, நகரமைப்பு, பணிகள் குழு ஆகிய 6 நிலைக்குழுக்களுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று பிற்பகல் நடந்தது. இதில் ஒவ்வொரு நிலைக்குழுவிலும் தலா 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த 6 பேரில் இருந்து, ஒருவரை நியமனக்குழு தலைவர் மற்றும் நியமன குழு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

Related Stories: