காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். இதையெட்டி, இந்தாண்டு பங்குனி உற்சவ விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சூரியபிரபை, சிம்மம், சந்திரபிரபை, பூதம், நாகம், வெள்ளி அதிகார நந்தி சேவை, வெள்ளி இடபம் உள்பட பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் சமேத ஏலவார்குழலி அம்மனுடன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

இதில் கடந்த 13ம்தேதி 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி முக்கிய வீதியுலா, அன்றிரவு ஏகாம்பரநாதர் சமேத ஏலவார்குழலி அம்மன் வெள்ளித்தோ் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரத காட்சி, குதிரை வாகனம், ஆள் மேல் பல்லக்கு ஆகிய கோலங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடந்தது. இதில் வாணவேடிக்கை, பேண்ட் வாத்தியம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம் பெருக்கரணை கிராமத்தில் நடுபழனி என்றழைக்கப்படும் மரகத தண்டாயுதபாணி கோயிலில் 45ம் ஆண்டு படி உற்சவ விழா மற்றும் 56ம் ஆண்டு பங்குனி உத்திரம் மற்றும் பால் காவடி விழா நேற்று நடந்தது. படி உற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி இடும்பன் பூஜை, 17ம் தேதி தண்டாயுதபாணிக்கு மகா அபிஷேகம், தொடர்ந்து சந்தனம் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து, மொட்டை அடித்து முருகப்பெருமானுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரர் கோயிலில், பவுர்ணமி நாளை முன்னிட்டு நேற்று பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. இதையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், ராகவேந்திரர், நந்தி, சிவன் ஆகிய சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கலந்து கொண்ட ரகோத்தம சுவாமிகள், கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். விழா ஏற்பாடுகளை ராகவேந்திரர் அறக்கட்டளை நிர்வாகி ஏழுமலை செய்தார். விழாவில் கருங்குழி, மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: