செய்யூர் வட்டாரத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் நலக்குழுவினர் ஆய்வு

செய்யூர்: செய்யூர் தாலுகாவில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், தண்ணீர் விநியோக கட்டிடங்கள் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் பெரும் அவதியடைகின்றனர். இதனால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், புதிய கழிப்பறைகள், தண்ணீர் விநியோகிக்கும் கட்டிடங்கள் கட்ட நபார்டு திட்டத்தின் மூலம் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாரம் ஈசூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் 6 கூடுதல் வகுப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்த ₹89.54 லட்சம், கீழ்மருவத்தூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்த ₹39.74 லட்சம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடக்கின்றன. இந்த கட்டிட பணிகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், சென்னை கோட்டம் தாட்கோ கூடுதல் செயற்பொறியாளர் அன்புசாந்தி, உதவி செயற்பொறியாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: