தேனி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி திமுக சேர்மன் வேட்பாளர்கள் அறிவிப்பு

தேனி/உத்தமபாளையம், மார்ச் 4: தேனி மாவட்டத்தில் இன்று 6 நகராட்சி அலுவலகங்களிலும் 22 பேரூராட்சி அலுவலகங்களிலும் காலை 10 மணிக்கு நகர்மன்றத் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல இன்று மதியம் 2.30 மணிக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சித் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. போலீஸ் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் சற்குணம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கம்பம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு வனிதா நெப்போலியன், கூடலூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பார்வதி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பவானி முத்து ராஜாவும் பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கவியரசுவும், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு கீதா சசிகுமாரும் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பண்ணைப்புரம் பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக தி.மு.க. வரலாற்றில் பெண் சேர்மன் இங்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த முகமது அப்துல் காசிம் (41) இளம்வயதில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோம்பை பேரூராட்சி முதல்முறையாக ஆதிதிராவிடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வை சேர்ந்த மோகன்ராஜா சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேவாரம் பேரூராட்சியில் பெண் சேர்மன் வேட்பாளராக லட்சுமி பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் க.புதுப்பட்டி பேரூராட்சி பெண் சேர்மன் வேட்பாளராக சுந்தரி பாஸ்கரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அனுமந்தன்பட்டி பேரூராட்சி தி.மு.க. வேட்பாளராக ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: