வி.கைகாட்டி அருகே லாரி -அரசு பேருந்து மோதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 20 பேர் காயம்

அரியலூர், மார்ச்2: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே லாரியும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர்,நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். அரியலூரிலிருந்து வி.கைகாட்டி வழியாக கோட்டியால் கிராமத்துக்கு அரசு நகரப்பேருந்து ஒன்று நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அணிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன்(56) பேருந்தை ஓட்டிச் சென்றார். நடத்துனராக சாவடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமார்(50) பணியில் இருந்தார். பேருந்து வி.கைகாட்டி அருகேயுள்ள கா.கைகாட்டி அருகில் சென்றபோது, எதிரே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது.

இதில், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் அயன்சுத்தமல்லி பாத்திமாமேரி(47), ஆஞ்சலாமேரி(50), சுத்தமல்லி கண்மணி(40), கல்லூரி மாணவிகள் சுத்தமல்லி காவியா(18), கோரைக்குழி அகல்யா(18), காரைக்காட்டான்குறிச்சி சுவேதா(18), வேனாநல்லூர் முரளி மகன் பார்த்தசாரதி(7) உட்பட 20 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற கயர்லாபாத் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கயர்லாபாத் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Related Stories: