கிராமத்தில் புகுந்த யானை விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே அதிகாலை

குடியாத்தம், பிப்.12: குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டினர்.வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. இதனால், அங்குள்ள யானைகள் குடியாத்தம் வனச்சரகத்திற்குள் அவ்வப்போது நுழைவது வழக்கம். அப்போது தமிழக யானைகளுடன், ஆந்திர யானைகளுக்கு பயங்கர சண்டை ஏற்படும். இதில் ஆந்திர யானைகள் குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிடுகிறது.

இதேபோல் நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த சைனகுண்டா- ஆம்பூரான்பட்டி கிராமத்திற்குள் ஒற்றை யானை நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசுகள் வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டினர். இச்சம்பவத்தால் அங்கு நேற்று அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் அந்த யானை கிராமத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திவிடுமோ? என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: