(தி.மலை) வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் போராட்டம் யூரியாவுடன் இணை பொருள் வாங்க நெருக்கடி

திருவண்ணாமலை, பிப்.1: யூரியாவுடன் இணை பொருட்களை வாங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதை கண்டித்து, வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், செந்தில்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் யூரியா வாங்கும் விவசாயிகளை, தர பரிசோதனை செய்யப்படாத இணை பொருளான குருணை வாங்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்துவதை கண்டித்து முழக்கமிட்டனர். 10 கிலோ குருணையை ₹700க்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இது ெதாடர்பாக பலமுறை வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து, டிஆர்ஓ பிரியதர்ஷினி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: