நெல்லையில் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

நெல்லை, ஜன.29: கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வு காரணமாக நேற்று முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் வழிப்பாட்டு தலங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. நெல்லையப்பர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டு தலங்கள் திறக்க அரசு தடை விதித்திருந்தது. இதையொட்டி 3 தினங்களும் கோயில்கள், மசூதி, தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் நேற்று முன்தினம் அரசால் அறிவிக்கப்பட்டது.

அதில் வழிப்பாட்டு தலங்களை தினமும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நெல்லையில் உள்ள வழிப்பாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் சென்று சுவாமி, அம்பாளை மனமுருக வழிப்பட்டு சென்றனர். நெல்லை சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோயில், வரதராஜ பெருமாள் கோயில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயில், பாளை ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் டவுன் புட்டாரத்தியம்மன் கோயில், வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் பக்தர்கள், பெண்கள் வழிபாடு நடத்தினர். பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு ெதாழுகைகள் நடந்தன. தேவாலயங்களும் நேற்று வழக்கம் போல் திறந்திருந்தன.

Related Stories: