நகர்ப்புற தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்

விழுப்புரம், ஜன. 26: தமிழகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 9 மாதங்களிலேயே மக்களிடையே அமோக வரவேற்பையும், நற்பெயரையும் பெற்றுள்ளது. கொரோனா கால நிவாரண உதவி, மகளிர்களுக்கு இலவச பயணம், நிலுவையில் இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் துவக்கம் போன்ற பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, மக்களிடையே நற்பெயரை பெற்றுள்ள நிலையில் 10 ஆண்டுகாலம் எதிர்க் கட்சியாக இருந்து கட்சியில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.

அதன்படி, விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தலை நடத்தி முடித்த திமுக அரசு, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலையும் நடத்திமுடித்த கையோடு கூட்டுறவு சங்கத்தேர்தலை நடத்திடவும் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளாராம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கதேர்தலின் பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது, அந்த பதவிகள் காலியாக இருப்பதாகவும் கூட்டுறவுத்துறை பதிவாளர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு சங்கத்தேர்தலை நடத்த அதற்கான பணிகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்தபோது உழைத்த திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக திகழ்ந்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களின் நலனுக்காக சிறந்ததிட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேசமயம், கட்சியினரையும் அங்கீகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத்தேர்தலில் உழைத்தவர்களுக்கு பதவிகளை வழங்கிட வேண்டுமென தெரிவித்தனர். மாவட்டத்திற்கு 100க்கு மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவிகளும் மாவட்டஅளவில் ஆவின் சேர்மேன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர், கூட்டுறவு பண்டகசாலைத்

தலைவர், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர், வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. மாவட்ட அளவிலான பதவிகளை பிடிக்க கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராம அளவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவிக்கு ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புறத் தேர்தலில் வாய்ப்புகள் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தேர்தலின்போது நடத்தப்பட்ட நேர்காணலில் கவுன்சிலர் சீட்டு இல்லையென்றால் அடுத்துவரும் கூட்டுறவுதேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாம். இதனால், வாய்ப்புகள் கிடைக்காத நிர்வாகிகள் பலரும் ஆவலோடு கூட்டுறவு தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்களாம்.

Related Stories: