கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இடத்தை மாற்ற கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை கூடலூரில் பரபரப்பு

கூடலூர்:  கூடலூர் நகராட்சியில் வெளியேறும் கழிவு நீர் முழுவதுமாக முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் கூடலூரை ஒட்டியுள்ள கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றிலிருந்து நேரடியாக குடிநீர் பம்பிங் செய்து சப்ளை செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கூடலூர் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கருநாக்கமுத்தன்பட்டி ரோட்டில் முல்லை பெரியாறு சிறு வாய்க்கால் கீழ்ப்புறமாக இடம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் சுத்திகரிப்பு நிலையம் சிறு வாக்கால் மேற்புறமாக அமைத்து தருமாறு கடந்த செப்டம்பர் மாதம் கூடலூர் நகராட்சி ஆணையாளருக்கு ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சக்குளம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால் தற்போது சுத்திகரிப்பு நிலைய பணி தொடங்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து நேற்று ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுத்திகரிப்பு நிலைய இடத்தை மாற்றி அமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து நகராட்சியின் தற்போதைய ஆணையாளர் சித்தார்த்தன் சுத்திகரிப்பு நிலையம் கட்ட உள்ள இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பொதுமக்களின் கோரிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: