விவசாயிகள் 11வது தவணை தொகை பெற ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம்

சிவகங்கை:  விவசாயிகள் பி.எம் கிசான் திட்ட 11வது தவணை தொகை பெற தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 2ஆயிரத்து 780 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 11வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்கள் விபரங்களை பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் சரிபார்ப்பு செய்யலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய 2முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதார் விபரங்களை வருகின்ற 28.2.2022க்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான 11வது தவணைத் தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: