முத்துப்பேட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் நெல் நஞ்சை தரிசில் பயறு வகை பயிர் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

முத்துப்பேட்டை, ஜன.26: முத்துப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்டார அளவிலான நெல் நஞ்சை தரிசில் பயறு வகை பயிர்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை வகித்து முத்துப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது: முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு முன்னர் நஞ்சை தரிசாக உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறு வகை பயிர்களை விவசாயிகள் விதைப்பு செய்து அதிக லாபம் பெறலாம். ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் இருந்து பிப்ரவரி மாதம் 2ம் வாரம் வரை நஞ்சை தரிசில் பயறு வகை பயிர்களை விதைப்பு செய்யலாம். அவ்வாறு விதைப்பு செய்ய நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கு ஐந்து முதல் பத்து நாட்களுக்கு முன்பு நெல்வயல்கள் சரியான ஈரப்பதத்தில் இருக்கும்போது அதாவது மெழுகுப் பதத்தில் உளுந்து மற்றும் பச்சை பயறு விதைகளை விதைப்பு செய்யலாம்.

விவசாயிகள் நஞ்சை தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யும்போது மிகக்குறைந்த சாகுபடி செலவில் அதிக வருமானம் பெறுவதுடன் பயறுவகைப் பயிர்கள் காற்றிலுள்ள தழைசத்தினை கிரகித்து பூமியில் நிலை நிறுத்துவதால் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் நெல் அறுவடைக்கு முன்னர் உளுந்து மற்றும் பச்சைப்பயிறு போன்றவற்றை விதைத்து லாபம் பெறலாம். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெல் பயிரில் அறுவடைக்கு முன் விதைப்பு செய்ய இயலாத நிலையில் அறுவடை முடிந்தவுடன் வயலில் உள்ள ஈரப்பதத்தினை பயன்படுத்தி உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற விதைகளை ஊறவைத்து பின் விதைப்பு செய்யலாம். உளுந்து விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.48வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உளுந்து விதைகளை மானிய விலையில் வாங்கி நெல் நஞ்சை தரிசில் சாகுபடி செய்து பலன் பெற வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். முகாமில் துணை வேளாண் அலுவலர் காத்தையன், உதவி வேளாண் அலுவலர் கதிரேசன், அட்மா வட்டார தொழில் நுட்ப அலுவலர்கள் சுரேஷ், பன்னீர்செல்வம், சவுமியா, வேளாண் விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை, உரிமம் தனியார் விதை விற்பனையாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: