காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் 3 நாட்களுக்கு பின் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்; கூட்டம் அதிகரிப்பதால் கொரோனா பரவும் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அரசின் கொரோனா விதிகளின்படி 3 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையொட்டி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்து ஆகம விதியின்படி, வழக்கம்போல் பூஜை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு நேற்று கோயில்கள் திறக்கப்பட்டன. மேலும், முகூர்த்த நாள் என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் எடுக்க வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்தனர். அவர்கள், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் உள்பட பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக தரிசனம் செய்தனர். இதனால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

Related Stories: