குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து புகார் பெட்டியில் குவியும் மனுக்கள்

கடலூர், ஜன. 25:   நோய் பரவல் தொற்று காரணமாக குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை செலுத்தி விட்டு செல்கின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  கொரோனா நோய் பரவல் தொற்று காரணமாக நிபந்தனைகளோடு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரடியாக ஆட்சியரிடம் வழங்கி தீர்வு காணும் நிலையில் மக்கள் புகார் பெட்டியில் செலுத்தி விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சராசரியாக 300 முதல் 400 வரை வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் நிலையில் தற்பொழுது குறைந்த எண்ணிக்கையிலேயே மனுக்கள் வருகிறது என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதற்கிடையே அத்தியாவசிய தேவை மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்னை தொடர்பாக மனு கொடுக்க பொதுமக்கள் இதுபோன்று புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தி விட்டுச் செல்லும் நிலையில் வழக்கம் போல் எடுக்கப்படும் துரித நடவடிக்கை போன்று புகார் பெட்டியில் செலுத்தும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவித்தனர். மேலும் புகார் பெட்டியில் பெறப்படும் மனுக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வரப்பெற்ற மனுக்கள் நிலவரம் மற்றும் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: