திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து ரயில் சேவைகள் விரைவில் துவங்கப்படும்

திருவாரூர், ஜன.24: திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து ரயில் சேவைகளும் விரைவில் துவங்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரை ரயில் நிலைய மேலாளர் ராம்சரண் மீனா, கோட்ட உதவி பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்தின் முகப்பு, பிளாட்பாரம், கழிவறை, பயணிகள் தங்கும் அறை போன்றவற்றினை கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் ஆய்வு செய்ததுடன் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் நுகர்வோர் அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் ரமேஷ், வணிகர் சங்க பேரமைப்பு பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், பாண்டியன், மோகன் மற்றும் சுகுமார் உள்ளிட்ட பலரும் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது, திருவாரூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் குறித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல் மற்றும் 4 வது பிளாட்பாரங்களில் 2 எக்சிலேட்டர் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு மற்றும் மூன்றாவது பிளாட்பாரங்கள் உயரப்படுத்த வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதன் பின்னர் எக்சிலேட்டர் பொருத்தப்படும். மேலும் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரயில் மார்க்கத்தில் முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுற்ற பின்னர் விரைவு ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக நடைபெறும். இவ்வாறு கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: