பொத்துமரத்து ஊருணியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி, ஜன. 22: சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் கடைகள் அதிகரித்து வருவதால் ஊருணி சுருங்கி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள பொத்து மரத்து ஊருணியில் வேன் ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஊருணியில் மரங்கள் அடர்ந்து முளைத்திருந்தன. இதனால் நகரின் மைய பகுதியில் குளிர் தரும் சோலைவனம் போல் ஊருணி இருந்து வந்தது. இந்நிலையில், இங்கிருந்த வேன் ஸ்டாண்ட்டை அகற்றி ஊருணியை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல லட்சம் மதிப்பில் ஊருணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர்தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே பொத்துமரத்து ஊருணி ஆழப்படுத்தும் பணியின் போது மழை காரணமாக ஊரணியில் தணணீர் நிரம்பியது. இதனால், ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தபபட்டது. இதன் பின்னர் ஊருணியில் ஆழப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது.  இதனால், ஊருணி கரையில் பூக்கடை, டீக்கடை, கோயில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். இந்த ஊருக்கு நாராணாபுரம், போஸ்காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் பெய்யும் மழை நீர் வந்தடைகிறது. ஆனால் ஊருணியில் கழிவு நீர் கலப்பதால் மழைநீர் மாசடைகிறது. எனவே, ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், ஊருணி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: