திருக்கழுக்குன்றத்தில் பழைய பள்ளி கட்டிடம் அகற்றம்: மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

திருக்கழுகுன்றம்: திருக்கழுக்குன்றத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த பழைய பள்ளி கட்டிடம், தினகரன் செய்தியின் எதிரொலியாக இடித்து அகற்றப்பட்டது. இதனால், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கோயில்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1924ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஓடுகளால் நெய்த கட்டிடம் என்பதால், காலப்போக்கில் அந்த ஓடுகள் உடைந்தும், கட்டிடத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு கட்டிடத்தின் சில பாகங்கள் இடிந்து விழுந்தன.

இதற்கிடையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளி வளாகத்திலேயே மீதமுள்ள இடத்தில், புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், பள்ளி வளாகத்தில் பயன்படாமல், பழுதடைந்த கட்டிடம் அப்படியே இருந்தது. அதனால், எந்த நேரத்தில் இடிந்துவிழும் என்ற அச்சத்துடன் இருந்தனர். மேலும், பாழடைந்த கட்டிடத்தில் பாம்பு, பூரான், தேள் உப்ட பல்வேறு விஷப்பூச்சிகள் அதிகமாக இருந்தன.

இதனால், அந்த பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 30ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் பாழடைந்து அபாய நிலையில் இருந்த பழமையான பள்ளி கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை உடனடியாக இடித்து தள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்பேரில் பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதனால், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: