மாமல்லபுரம் அருகே கட்டுமரம் செய்யும் பணியில் மீனவர்கள் மும்முரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த செம்மஞ்சேரி மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர், கேரளாவில் இருந்து தீக்குச்சி மரம் வாங்கி வந்து, இசிஆர் சாலையில் உள்ள பட்டிப்புலம் மீனவர் பகுதியில் வைத்து கட்டுமரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடற்கரையோரம் உள்ள மீனவ குப்பங்களில் உள்ள மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு முக்கியமாக இருப்பது படகுகள். அதில் கட்டுமரம், மோட்டார் பொருத்திய பைபர் படகு, விசைப்படகு என பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். இதில், கட்டு மரத்திலும், சிறிய பைபர் படகிலும், குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே சென்று குறைவான மீன்களே பிடிக்க முடியும். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க ஏதுவாக விசைப் படகுகள் பயன்படுத்தப்படும். தற்போது கட்டுமரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதுகுறித்து செம்மஞ்சேரி மீனவர்கள் கூறுகையில், கேரளாவில் இருந்து தீக்குச்சி மரம் வாங்கி வந்து கட்டுமரம் தயாரிக்கிறோம். 20 கட்டுமரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தீக்குச்சி மரத்தில் இருந்து கட்டுமரம் மட்டுமே செய்ய முடியும். வேறு, எதற்கும் இந்த மரம் பயன்படாது. கட்டுமரம் மூலம் 10 கிமீ வரை கடலில் சென்று மீன்பிடிக்கலாம். அதில் 3 பேர் பயணம் செய்யலாம். பைபர் படகு, விசை படகில் சென்று மீன்பிடிக்கும்போது, காற்று அதிகமாக வீசினாலோ அல்லது ராட்சத அலையில் சிக்கி கவிழும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஆனால், கட்டுமரத்தில் சென்று மீன்பிடிக்கும்போது, கவிழ்ந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. கட்டுமரத்தை கொண்டு கரை வந்து சேரலாம். ஒரு சில மீனவர்கள் கட்டுமரத்தை பயன்படுத்துவது இல்லை. எனவே, மீனவர்கள் கட்டுமரத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: