தண்டலம் கிராமத்தில் தெருவின் நடுவில் மின்கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தண்டலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்கு வனத்தோட்டம் தெருவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, அங்கு சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல், அப்படியே சிமென்ட் சாலை அமைத்தனர். இதனால், அந்த தெருவில் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ்சும் செல்ல முடியவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்களும், ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பெரியபாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதியில், சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை, மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: