கொரோனா வீட்டுதனிமையில் உள்ளவர்கள் இசஞ்சீவனி காணொலி மருத்துவ சேவை திட்டத்தை பயன்படுத்துவது எப்படி? கலெக்டர் விளக்கம்

நாகர்கோவில், ஜன.21: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:பொதுமக்கள் வீட்டில் இருந்தே எளிமையான முறையில் மருத்துவ சேவைகளை பெறுவதற்கு அரசு இசஞ்சீவனி  காணொலி மருத்துவ சேவை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும் மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையால் இதனை உபயோகிக்கப்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர். இந்தநிலையில் கொரோனா மூன்றாவது அலையில் பெருவாரியான தொற்று பாதித்தவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்கள் தினந்தோறும் இச்சேவையை பயன்படுத்தி தங்கள் ஆரோக்கியத்தை நன்முறையில் மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தில் பயன்பெற esanjeevaniopd.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். இதில்  Patient Registration என்றிருக்கும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நமது செல்போன் எண் மற்றும் மாநிலத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும். பின்னர் General OTP யை தேர்வு செய்து அதில் Tamilnadu esanjeevani OPD யை தேர்வு செய்ய வேண்டும். send OTPயை கிளிக் செய்தால் நமது அலைபேசிக்கு வரும் OTPயை அதில் டைப் செய்ய வேண்டும். பதிவு செய்த நபரின் பெயர் மற்றும் முகவரி பதிவு செய்து டோக்கன் நம்பர் பெற வேண்டும். பின்னர்  Patient loginல் அலைபேசி எண் மற்றும் டோக்கன் எண் பதிவு செய்துவிட்டு லாகின் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். காத்திருக்கும் அறை சென்ற பின்னர் அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கியூ நம்பர் தெரியவரும். கியூ நம்பர் சீரோ வரும்போது கால் நவ் பட்டன் ஆக்டிவேட் செய்யப்படும். அதனை கிளிக் செய்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

கோவிட் 19ல் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இச்சேவையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை தங்களுடைய மருத்துவ தேவைகள், சந்தேகங்களுக்கு உபயோகப்படுத்துவதுடன் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: