மறுநில அளவை பணிகள் தனிப்பட்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், ஜன.20:  குமரி மாவட்ட நில அளவைத்துறையின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டம் புத்தளம் கிராமத்தில் தற்போது நடைபெற்றுவரும் மறுநில அளவைப்பணிகளில், உட்பிரிவுகளுடன் கூடிய அளவுப்பணி மற்றும் விசாரணைப் பணிகள் குறித்து மாவட்ட  கலெக்டர் அரவிந்த்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், அகஸ்தீஸ்வரம் தாலுகா, புத்தளம் கிராமத்தில் உட்பிரிவுகளுடன் கூடிய அளவுப்பணி மற்றும் விசாரணைப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். அப்போது, அளவுப்பணிகள் நடைபெறும் வீதம், உபகரணங்கள் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்தும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகள் குறித்தும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நில அளவர்களால் மேற்கொள்ளப்படும் தற்போதைய பணிகளில் புலன் விசாரணை மேற்கொண்டும், ஆவணங்கள் சரிபார்ப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே மறுநில அளவைப்பணியில் முடிவு செய்யப்பட்டுள்ள பறக்கை கிராமம் மற்றும் வடக்குதாமரைக்குளம் கிராமம் ஆகியவற்றின் முடிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும், அதன்படியே கூட்டுப்பட்டாதாரர்களின் எண்ணிக்கையை குறைத்து தனிப்பட்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போதைய நடைமுறையை பின்பற்றுமாறும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில் ஆய்வாளர்கள் சேதுராமன், வெங்கடேஷ், துணை ஆய்வாளர்கள் பாத்திமா, ரூபன், ஸ்டேன்லி மற்றும் நில அளவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: