தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகளின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

தூத்துக்குடி, ஜன.12: தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல ‘லே’ செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு கடந்த அக்டோபர் 20ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் திருமண்டல உப தலைவராக தமிழ்செல்வன், குருத்துவ செயலாளராக இமானுவேல் வான்ஸ்றக், ‘லே’ செயலாளராக நீகர் பிரின்ஸ் கிப்டசன், பொருளாளராக மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகிய நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். முதலில் இதை அறிவித்து எங்களுக்கு ஆசி வழங்கிய பேராயர் தேவசகாயம், மறுநாளே தேர்தலை ரத்து செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தார். இதுகுறித்து சினாடு அலுவலகத்தில் தெரிவித்த நிலையில் புதிய நிர்வாகிகளோடு இணைந்து செயல்படவேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும் என்று  பேராயர் தேவசகாயத்தை எச்சரித்தனர். அதனைத்தொடர்ந்து பேராயர் எங்களோடு இணைந்து பணியாற்றினார்.

அப்போது நிர்வாகிகளின் ஒப்புதலோடு திருமண்டல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளராக பிரேம்குமார் ராஜாசிங்கையும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளராக ஜேஸ்பர் அற்புதராஜையும் பேராயர் தேவசகாயம் நியமித்தார். அதன் அடிப்படையில் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தாளாளர்களை நியமனம் செய்தார். இதற்கிடையே பேராயர் தேவசகாயம் நிர்வாகிகளான எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முன்னாள் நிர்வாகியான ராஜனை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளராக நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். பேராயரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் திருமண்டல நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதனால், கல்வித்துறை அதிகாரிகள் எந்த மேலாளர் நியமித்த தாளாளர்களை அங்கீகரிப்பது என்பது தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். பேராயரின் இந்த செயலால் திருமண்டலத்திலுள்ள 27உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 650க்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 125க்கும் மேற்பட்ட அலுவலர்கள் டிசம்பர் மாத ஊதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சினாடு நிர்வாகம் புதிய நிர்வாகிகள் தேர்வை அங்கீகரித்து விட்டதால் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங்கால் நியமிக்கப்பட்ட தாளாளர்கள் வழங்கியுள்ள சம்பள பட்டியலுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

தொடர்ந்து திருமண்டலத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் பேராயர் தேவசகாயத்தின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து சினாடுக்கு நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். இந்த புகாரின் பேரில் சினாடு நிர்வாகம் விரைவில் நல்லதொரு முடிவினை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றனர். பேட்டியின்போது, திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ ஊழிய நிலவரக்குழு செயலாளர் வெல்ற்டன் பள்ளிகளின் தொடர்பாளர் ஜான்சன் பால்டேனியல் உடனிருந்தனர்.

Related Stories: