குமரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு பூஸ்டர் தடுப்பூசி அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்

நாகர்கோவில், ஜன.11 : குமரி மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் வடசேரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் நடைபெற்றது. முகாமினை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியினை சென்னையில் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுவரை 11 லட்சத்து 89 ஆயிரத்து 529 நபர்களுக்கு முதல்டோஸ் தடுப்பூசியும், 9 லட்சத்து 969 நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இதுவரை 79 சதவீதம் பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசியும், 60 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி 9 மாதம் முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்த மாத இறுதிக்குள் 26 ஆயிரத்து 500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி, மாநகர நல அலுவலர் விஜயசந்திரன், வழக்கறிஞர் மகேஷ், பசலியான், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: