திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய பாலத்தில் இலகுரக வாகனங்கள் சென்று வர நடவடிக்கை

திருச்சி, ஜன.11: திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் புதிய பாலத்தில் இலகுரக வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காவிரியில் பெருகி வந்த வெள்ள நீரால் முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தில் 9 மதகுகள் உடைந்து போனதால் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்துக்கென கொள்ளிடம் பாலத்திற்கு கீழ் வண்டிகள், வாகனங்கள் சென்று வரும் வகையில் தரை பாலத்துடன் கூடிய மணலால் ஆன சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக காவிரி மற்றும் அய்யாற்றில் பெருகி வந்த மழை வெள்ள நீரில் காவிரியில் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில் நவ.17ல் கொள்ளிடம் புதிய பாலம் வழியாக திறக்கப்பட்ட வெள்ள நீரில் போக்குவரத்து வசதிக்கென கொள்ளிடத்தில் போடப்பட்டு இருந்த மணல் சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் வண்டி-வாகனங்கள் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

தற்போது காவிரி திண்டுக்கரை, கொடியலாம், கரையோரம் எலுமனூர், திருப்பராய்த்துறை, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம், பெரியகருப்பூர் உள்ளிட்ட சுற்றப்புற சின்னக்கருப்பூர் கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கொள்ளிட கரைக்கு அப்பால் உள்ள வாத்தலை, சென்னகரை, சிறுகாம்பூர், வடக்கு சித்தாம்பூர், தெற்கு சித்தாம்பூர், கல்லூர், ஆமூர் பகுதிகளில் இருந்து விவசாய தொழிலாளர்களை வண்டி வாகனங்களில் அழைத்து வந்து அறுவடை செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொள்ளிடத்தில் வாகன போக்குவரத்து வசதி இல்லாததால் விவசாய தொழிலாளர்களை அழைத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதிகளில் காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் நலன் கருதி கொள்ளிடம் புதிய பாலத்திலோ அல்லது கடந்த காலங்கள்போல் கொள்ளிடத்திலோ புதிய மணல் பாதை அமைத்து வண்டி வாகனங்கள் சென்றுவர வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Related Stories: