ஓஎம்ஆர் சாலை சீரமைப்பு

திருப்போரூர்: கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக ஓஎம்ஆர் சாலை எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி, பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டன. இதையொட்டி, வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்தித்து, படுகாயமடைந்தனர்.

மேலும், திருப்போரூர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடப்பதால், அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களிலும் மண்சரிந்து அதிக சேதம் ஏற்பட்டது. காலவாக்கம் பகுதியில் சாலைக்கு நடுவே இருந்த பள்ளத்தை கவனிக்காமல் கீழே விழுந்த வாலிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து இறந்தார்.

மேலும், திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து கண்ணகப்பட்டு வரை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் காரணமாக தூசி மண்டலமாக மாறியுள்ளது என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன், உதவிப் பொறியாளர் கோமதி ஆகியோர் ஓஎம்ஆர் சாைலயை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, சேதமடைந்த பகுதிகளில் தார் மற்றும் ஜல்லி கலவை போட்டு சீரமைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து சாலை ஆய்வாளர் அப்துல்காதர் முன்னிலையில் ஓ.எம்.ஆர். சாலையில் சேதமடைந்த பகுதிகளில் தார் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது.

Related Stories: