திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க தாலுகா வாரியாக அதிகாரிகள் குழு: கலெக்டர் பேட்டி

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க தாலுகா வரியாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஆவடி மாநகராட்சி இணைந்து கொரோனா தடுப்பு முன் களப் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி, பருத்திப்பட்டு திறந்தவெளி பூங்காவில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய நோய் பரவியல் நிறுவன மருத்துவ விஞ்ஞானி டாக்டர் கணேஷ்குமார் கலந்து கொண்டு, 300 முன் களப்பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தார்.

இதில், பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் வலி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடவேண்டும். அவர்களுக்கு தொற்று உறுதியானால், மருத்துவர் கூறும் ஆலோசனையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாமல் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட இணைய நோய் உள்ளோருக்கு தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் தனி கவனம் செலுத்தி மருத்துவர் கூறும் ஆலோசனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, முன் களப்பணியாளர்கள், முழுவீச்சில் தங்களை அர்ப்பணித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நோய் இல்லாத நிலையை உருவாக்குவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும், ஆவடி மாநகராட்சியில், 18வது தடுப்பூசி சிறப்பு முகாம் 72 இடங்களில் நடந்தது. தினமும் 10 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களும் நடக்கிறது. இதில், ஆவடி, புதிய ராணுவ சாலை, பிள்ளையார் கோயில் அருகில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம், அதே பகுதி, தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் நடந்த காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கண்காணிக்க தாலுகா வாரியாக, அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர், விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கின்றனர். மேலும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் கூட்டம் நடத்தி உள்ளோம். அவர்கள் என்ன நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளோம். போலீசாருக்கும், தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிகக அறிவுறுத்தியுள்ளோம். நமது மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 500ஐ கடந்துவிட்டது. தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ அதிகாரிகளை வரவழைத்து அரசின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி கூறியுள்ளோம். அதனியார் மருத்துவமனைகளில்  அதிக படுக்கை வசதி ஏற்படுத்தும்படி தெரிவித்துள்ளோம்.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன், மருந்து, படுக்கை வசதி உள்பட அனைத்து மருத்துவ வசதிகளும் தயாராக உள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசத்தை முழு நேரமும் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 12 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. 2வது தவணை தடுப்பூசி 2 லட்சம் பேருக்கு மேல் போடவில்லை. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் எஸ்.சரஸ்வதி, பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் டாக்டர் முருகன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: