ராமநாதபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் ரேஷன் கார்டு பெறலாம் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது

ராமநாதபுரம், ஜன.8:  ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரேஷன் கார்டு வழங்க அந்தந்த தாலுகாக்களில் உள்ள சிவில் சப்ளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெறாத 18 வயது நிரம்பிய மூன்றாம் பாலினத்தவர் இணையம் மூலம் மின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம், ஆதார் கார்டு, நலவாரிய உறுப்பினர் அட்டை, ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) ஆவணங்களை கைபேசி எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவரின் பெயரை அவர்களது பெற்றோர், காப்பாளர் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருப்பின் விண்ணப்பதாரரின் கோரிக்கை மனு அடிப்படையில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் ஆன்லைனில் அவரது பெயரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவரின் பெயர் வேறு வட்டம், மாவட்டத்தில் இருப்பின் அக்குடும்ப அட்டைகளில் இருந்து இவர்களது பெயர்களை ஆன்லைனில் நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மின்அஞ்சல் அனுப்பி விரைவாக பெயர் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர், காப்பாளர் அனுமதி தேவையில்லை. இச்சிறப்பு முகாமின் போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அமல்படுத்தியுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்பதாரர் முகக்கவசம் அணிந்து,  சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்   தெரிவித்துள்ளார்.

Related Stories: