அரசு பஸ் நேரத்தை மாற்ற கொட்டப்பட்டி மக்கள் கோரிக்கை

திண்டுக்கல், ஜன. 8:திண்டுக்கல் - கன்னிவாடி இடையே கொட்டப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகரப் பஸ், கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொட்டபட்டி வழியாக கன்னிவாடிக்கு அரசு பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.   காலையில் கன்னிவாடியில் இருந்து வரக்கூடிய நகரப்பேருந்து 10:30 மணிக்கு தான் கொட்டப்பட்டிக்கு வருகிறது. இதனால், பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, கன்னிவாடியில் இருந்து  வரக்கூடிய பஸ்சின்  நேரத்தை மாற்றி காலை 9 மணிக்குள் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று காலை கொட்டப்பட்டிக்கு கன்னிவாடியிலிருந்து வந்த அரசு நகர பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததன், மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: