ரயிலில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி

கடலூர், ஜன. 6:  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலன் (35) என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயசீலன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெயசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: