பிரபல ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸ் கைது

ஸ்ரீபெரும்புதூர்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்  எடிஎஸ்பி. வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையத்து கடந்த ஒரு வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குணாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக, சென்னை ஆயுதப்படை போலீஸ் வெங்கடேசன் என்பவரை கடந்த சில நாட்களாக போலீசார் தேடிவந்தனர். நேற்று முன்தினம் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் ரவுடிக்கு ஆதரவாக இருந்த இரண்டு போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: